Friday, June 20, 2008

சின்னா. சுப்புராயப்பிள்ளை நினைவு நாள் சிறப்புக் கட்டுரை

- புதுச்சேரி

ஆன்மீகம், ஞானம், தியாகம், வீரம், தேசப்பற்று, ஒற்றுமை, பழமை என்று எண்ணற்ற பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு பல நூற்றாண்டுகளைக் கடந்து அமைதியே உருவாய், அன்பின் உறைவிடமாய், அடைக்கல பூமியாய் இன்றளவும் திகழ்ந்து வருகிறது நம் புதுச்சேரி மாநிலம்.

பல சித்தர்கள் வாழ்ந்து மறைந்ததால் சித்தர் பூமி என்றும், மகாகவி பாரதியார், பாரதிதாசன், மகான் அரவிந்தர் போன்ற பல்வேறு அறிஞர்களும், கவிஞர்களும் வாழ்ந்து மக்களை வாழ்வித்ததால் ஞான பூமியென்றும், இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்ததால் அடைக்கல பூமி என்றும் பல்வேறு சிறப்புப் பெயர்கள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சிறப்புகளிலெல்லாம் குறிப்பிடப்படாத, யாராலும் அடையாளங் காட்டப்படாத, மேலும் பல சிறப்புகள் நம் புதுச்சேரிக்கு உண்டு. ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும், தங்களிடம் இருந்த அனைத்தையும் வாரி வழங்கிய பல்வேறு வள்ளல்கள் தோன்றிய பெருமையும் நம் புதுச்சேரிக்கு உண்டு.

'தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் சான்றோர்கள் இருப்பதனால் தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.' என்னும் புறநானூறு கூறும் தத்துவ வரிகளுக்கு ஏற்ப பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான வள்ளல்கள் வாழ்ந்ததாக நம் இலக்கியங்களும், வரலாறும் கூறுகின்றன. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, தமிழுக்கு தலை கொடுத்தான் குமணன், செத்தும் சீர் கொடுத்தான் சீதக்காதி என்று எண்ணற்ற கொடை வள்ளல்கள் தோன்றி மக்களின் துயர் துடைத்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

தமிழகத்தில் மட்டுமின்றி புண்ணிய பூமியாம் நம் புதுச்சேரியிலும் பல வள்ளல் பெருமக்கள் தோன்றி மக்களின் நலன் காக்க பொருளை வாரி வழங்கியிருக்கின்றார்கள். அன்னதான அறக்கட்டளை அமைத்து ஏழைகளுக்கு உணவளித்த குப்புசாமி நாயக்கர், ஞானுதியாகு முதலியார், செல்வராஜ் செட்டியார், கலவை சுப்புராயச் செட்டியார், ஆனந்தரங்கர் பிள்ளை போன்ற பல்வேறு வள்ளல்கள் தோன்றி நம் புதுச்சேரிக்கு பெருமை சேர்த்திருக்கின்றார்கள். அவர்களுள் முக்கியமானவரும் முதன்மையானவரும் தான் திருமிகு சின்னா. சுப்புராயப்பிள்ளை அவர்கள்.

- புதுச்சேரியின் வளம் கண்டு பிரெஞ்சுக்காரர்கள் நம்மை ஆட்படுத்தியிருந்த காலம் அது.

ஏறத்தாழ 208 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வணிகராய்த் திகழ்ந்த சின்னாப் பிள்ளைக்கும், அனந்தாயி அம்மையாருக்கும் இரண்டாம் மகனாகத் தோன்றியர் சுப்புராயப்பிள்ளை.

'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்னும் பழமொழிக்கு ஏற்ப சின்னா சுப்புராயப்பிள்ளை தன்னுடைய தந்தை செய்து வந்த வணிகத்தொழிலை விரிவுபடுத்தி பண்ட வாணிகம், நீலச்சாயம் மற்றும் துணிகளை பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருமளவில் பணம் ஈட்டினார். இதனால் 1840 - ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியின் மிகப் பெரும் செல்வந்தராய் உயர்ந்தார். இந்நிலையில் 1860 - ஆம் ஆண்டு சுப்புராயப்பிள்ளையின் தந்தை சின்னாப்பிள்ளை காலமானார். அதோடு அவர், வளர்த்து வந்த தனது பெரிய தந்தையின் மகனான லோகநாதனும் காலத்தின் கோலத்தால் இளம் பருவத்திலேயே இறந்து விட்டான். இச்சம்பவம் சின்னா சுப்புராயப்பிள்ளைக்கு மிகுந்த மனக்கலக்கத்தை அளித்தது.
இதனிடையே பெரிய தந்தைக்கு வாரிசு இல்லாததால் அவருடைய சொத்துக்களும் இவரிடமே வந்து சேர்ந்தது. பின்னர் மரகதம் அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தி வந்த சின்னா. சுப்புராயருக்கு வேதவள்ளி நாச்சியார் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தை என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அவரது வாழ்வில் மீண்டும் விதி விளையாடத் தொடங்கியது. அவரது மனைவி மரகதம் அம்மையார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

துயரச்சம்பவங்களின் தொடர்ச்சியால் பணம் ஈட்டுதலில் நாட்டத்தைக் குறைத்துக் கொண்ட சின்னா சுப்புராயப்பிள்ளை, தமக்குச் சொந்தமான இன்றைய திருவள்ளுவர் பணிமனை ஒட்டிய இடத்தில் பெரிய திடலை அமைத்து அங்கு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யத் தொடங்கினார்.

'பட்ட காலிலே படும்' என்னும் பழமொழிக்கு ஏற்ப அடுத்தடுத்த துயரச் சம்பவங்களினால் மனமுடைந்திருந்த சின்னா. சுப்புராயருக்கு மேலும் ஒரு பேரிடியாக அவரது ஒரே ஆதரவான மகள் வேதவல்லி நாச்சியாரும் 16 – ஆவது கன்னிப்பருவத்திலேயே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் மிகவும் மனக்கலக்கம் அடைந்த அவர் தனக்கு வாரிசு இல்லையே என்று எண்ணி கவலைப்பட்டார்.

மகளின் நினைவாகவே வாழ்ந்து வந்த சின்னா. சுப்புராயப்பிள்ளை, அவளுடைய உருவத்தை ஒத்த செப்புச்சிலையை பிரான்ஸ் நாட்டு தலைநகராகிய பாரீசில் செய்து புதுவைக்கு வரவழைத்து தற்போதைய திருவள்ளுவர் பணிமனை ஒட்டிய இடத்தில் கோயில் அமைத்து சிலையெழுப்பினார். அதோடு கோயிலின் பக்கத்தில் அன்னச்சத்திரம் அமைத்து வாழ்ந்து கெட்டவர்கள், வெளியே யாசகம் கேட்க அச்சப்படுபவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு இலவச மதிய உணவு அளித்து வந்தார்.

காலங்கள் உருண்டோடின. தள்ளாத வயதில் சின்னா. சுப்புராயப்பிள்ளையின் உடல்நிலை மோசமாகவே தமக்குப் பிறகு தாம் நடத்தி வரும் தர்மகாரியங்கள் எந்த காரணத்தினாலும் தடைபட்டுவிடக்கூடாது என்றெண்ணினார். அதன்படி தனக்கிருந்த சொத்துக்களை தனது சகோதரர்களுக்கு உரிய வகையில் பிரித்துக் கொடுத்து விட்டு பின் தனக்குச் சொந்தமான, சுப்புராயப்பிள்ளை சத்திரத்திற்கு அருகில் அமைந்திருந்த நஞ்சை நிலம், அவர் வாழ்ந்த இல்லம், பிற இடத்தில் அமைந்திருந்த சொத்துக்கள், பங்கு பத்திரம், பொருட்கள் ஆகியவற்றை 1875 – ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஆறாம் நாள் பிரெஞ்ச் அரசாங்கத்திடம் ஒப்படைத்து தான் நடத்தி வந்த தரும காரியங்களை தடையில்லாமல் தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என்றும் தனது மகள் வேதவல்லி நாச்சியாரின் சிலைக்கு நாள்தோறும் அபிNஷக ஆராதனை செய்ய வேண்டும் என்றும் உயில் எழுதினார். அப்போதைய மதிப்பின்படி அவர் அரசாங்கத்திடம் ஒப்படைத்த சொத்தின் மதிப்பு மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆண்டில் அதனுடைய மதிப்பு சுமார் 30 கோடிக்கு மேல் இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அறப்பணிக்காக கொடையாக அளித்த வள்ளல் சின்னா.சுப்புராயப்பிள்ளை 1875 – ஆம் ஆண்டு, ஜீன் மாதம் இருபதாம் தேதி காலமானார். ஓய்வின்றி அறப்பணி செய்து கொண்டிருந்த அந்த தியாகவிளக்கு காலம் என்னும் சூறாவளியால் அணைந்து போனது. சின்னா.சுப்புராயப்பிள்ளையின் உடல் அவரது ஒரே மகள் வேதவள்ளி நாச்சியார் நினைவிடத்தின் கோயில் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டு நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டது. அவர் எழுதிய உயிலின்படி அறப்பணி அவை அமைக்கப்பட்டு கடந்த 133 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இன்று வரை தினமும் வேதவல்லி நாச்சியார் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு நாள்தோறும் எண்ணற்ற ஏழைகளுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்

என்னும் மகாகவி பாரதியாரின் வாக்குக்கு ஏற்ப தன் வாழ் நாள் முழுவதும் தானத்திலே சிறந்தது அன்னதானம் ஒன்று மட்டுமே.

அன்னதானம் ஒன்றே கர்மவினைகளைப் போக்கக்கூடியது. என்ற சித்தர்களின் வாக்குப்படி தான் மறைந்த பிறகும் அறப்பணி தொடர தன்னுடைய எல்லா சொத்துக்களையும் கொடையாக வழங்கி விட்டுப் போன வள்ளல். சின்னா. சுப்புராயப்பிள்ளை புதுச்சேரி வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. ஒரு தனிமனிதரால் தொடங்கப்பெற்ற அறச்செயல், நூற்றாண்டுகளைக் கடந்தும், தொடர்ந்து ஒரு நாள் கூடத் தவறாது நடைபெற்று வருவது இந்தியாவிலேயே இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது,

சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமணம் நிலையம்.

அதே சாலையில் உள்ள முருகன் கோயில்.

முத்திரையர் பாளையம் மார்க்கெட்.

மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை.

அதே சாலையில் உள்ள பான்டெக்ஸ் துணியகம்.

திருவள்ளுவர் அரசு போக்குவரத்துக் கழகம்.

கென்னடி நகரில் உள்ள யாத்ரி நிவாஸ்.

மற்றும், இந்திரா நினைவு நகரில் உள்ள காலிமனையும், சுப்புராயப்பிள்ளை சத்திரமும், வெள்ளாழ வீதியில் உள்ள ஓட்டு வீடும் சின்னா. சுப்புராயப்பிள்ளையின் சொத்துக்களாகும். இவையாவும் அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் சின்னா. சுப்புராயப்பிள்ளை அறக்கட்டளையால் இன்று வரை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த அறக்கட்டளை மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட ஏழை, எளியவர்களுக்கும், அனாதை சிறுவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் மற்றும் தீராத நோயுடையவர்களுக்கும் உதவித்தொகை, இலவச மதிய உணவு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி, இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரண உதவி என்று ஆண்டுதோறும் சராசரியாக 18 லட்ச ரூபாய் செலவில் அறப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வள்ளல். சின்னா சுப்புராயப்பிள்ளைக்கு சிலை அமைக்கவும், இலவச மதிய உணவுப் பெறும் பயணாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், அறக்கட்டளை முகப்பில், மறைமலையடிகள் சாலை சந்திப்பில் அலங்கார வளைவு, கல்வெட்டு மற்றும் சரித்திர வரலாற்று குறிப்புகள் அமைக்கவும் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுவையில் வாழ்ந்த மகாகவி பாரதியார், பாரதிதாசன், மகான் அரவிந்தர், ஆனந்தரங்கர் பிள்ளை போன்ற பல்வேறு ஆன்றோர்களையும், சான்றோர்களையும், கவிஞர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு சிலை வைத்தும், பிறந்த நாள்களில் விழா எடுத்தும், பெருமை சேர்த்து வரும் அரசு
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அறப்பணிக்காக அர்ப்பணித்த வள்ளல் சின்னா. சுப்புராயப்பிள்ளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதுவை அரசு அவருக்கும் சிலை வைத்து விழா கொண்டாடுவதோடு அவரது வரலாற்றையும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய இந்த அறக்கட்டளையின் சொத்துக்களையும், நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்றில்லாமல் தான தர்மங்கள் செய்து புதுவை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள சின்னா. சுப்புராயப்பிள்ளையின் தான தர்ம காரியங்களை நினைத்து எண்ணம் பூரிப்போம் . . .

No comments: