Friday, June 20, 2008

சின்னா. சுப்புராயப்பிள்ளை நினைவு நாள் சிறப்புக் கட்டுரை

- புதுச்சேரி

ஆன்மீகம், ஞானம், தியாகம், வீரம், தேசப்பற்று, ஒற்றுமை, பழமை என்று எண்ணற்ற பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு பல நூற்றாண்டுகளைக் கடந்து அமைதியே உருவாய், அன்பின் உறைவிடமாய், அடைக்கல பூமியாய் இன்றளவும் திகழ்ந்து வருகிறது நம் புதுச்சேரி மாநிலம்.

பல சித்தர்கள் வாழ்ந்து மறைந்ததால் சித்தர் பூமி என்றும், மகாகவி பாரதியார், பாரதிதாசன், மகான் அரவிந்தர் போன்ற பல்வேறு அறிஞர்களும், கவிஞர்களும் வாழ்ந்து மக்களை வாழ்வித்ததால் ஞான பூமியென்றும், இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்ததால் அடைக்கல பூமி என்றும் பல்வேறு சிறப்புப் பெயர்கள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சிறப்புகளிலெல்லாம் குறிப்பிடப்படாத, யாராலும் அடையாளங் காட்டப்படாத, மேலும் பல சிறப்புகள் நம் புதுச்சேரிக்கு உண்டு. ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும், தங்களிடம் இருந்த அனைத்தையும் வாரி வழங்கிய பல்வேறு வள்ளல்கள் தோன்றிய பெருமையும் நம் புதுச்சேரிக்கு உண்டு.

'தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் சான்றோர்கள் இருப்பதனால் தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.' என்னும் புறநானூறு கூறும் தத்துவ வரிகளுக்கு ஏற்ப பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான வள்ளல்கள் வாழ்ந்ததாக நம் இலக்கியங்களும், வரலாறும் கூறுகின்றன. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, தமிழுக்கு தலை கொடுத்தான் குமணன், செத்தும் சீர் கொடுத்தான் சீதக்காதி என்று எண்ணற்ற கொடை வள்ளல்கள் தோன்றி மக்களின் துயர் துடைத்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

தமிழகத்தில் மட்டுமின்றி புண்ணிய பூமியாம் நம் புதுச்சேரியிலும் பல வள்ளல் பெருமக்கள் தோன்றி மக்களின் நலன் காக்க பொருளை வாரி வழங்கியிருக்கின்றார்கள். அன்னதான அறக்கட்டளை அமைத்து ஏழைகளுக்கு உணவளித்த குப்புசாமி நாயக்கர், ஞானுதியாகு முதலியார், செல்வராஜ் செட்டியார், கலவை சுப்புராயச் செட்டியார், ஆனந்தரங்கர் பிள்ளை போன்ற பல்வேறு வள்ளல்கள் தோன்றி நம் புதுச்சேரிக்கு பெருமை சேர்த்திருக்கின்றார்கள். அவர்களுள் முக்கியமானவரும் முதன்மையானவரும் தான் திருமிகு சின்னா. சுப்புராயப்பிள்ளை அவர்கள்.

- புதுச்சேரியின் வளம் கண்டு பிரெஞ்சுக்காரர்கள் நம்மை ஆட்படுத்தியிருந்த காலம் அது.

ஏறத்தாழ 208 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வணிகராய்த் திகழ்ந்த சின்னாப் பிள்ளைக்கும், அனந்தாயி அம்மையாருக்கும் இரண்டாம் மகனாகத் தோன்றியர் சுப்புராயப்பிள்ளை.

'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்னும் பழமொழிக்கு ஏற்ப சின்னா சுப்புராயப்பிள்ளை தன்னுடைய தந்தை செய்து வந்த வணிகத்தொழிலை விரிவுபடுத்தி பண்ட வாணிகம், நீலச்சாயம் மற்றும் துணிகளை பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருமளவில் பணம் ஈட்டினார். இதனால் 1840 - ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியின் மிகப் பெரும் செல்வந்தராய் உயர்ந்தார். இந்நிலையில் 1860 - ஆம் ஆண்டு சுப்புராயப்பிள்ளையின் தந்தை சின்னாப்பிள்ளை காலமானார். அதோடு அவர், வளர்த்து வந்த தனது பெரிய தந்தையின் மகனான லோகநாதனும் காலத்தின் கோலத்தால் இளம் பருவத்திலேயே இறந்து விட்டான். இச்சம்பவம் சின்னா சுப்புராயப்பிள்ளைக்கு மிகுந்த மனக்கலக்கத்தை அளித்தது.
இதனிடையே பெரிய தந்தைக்கு வாரிசு இல்லாததால் அவருடைய சொத்துக்களும் இவரிடமே வந்து சேர்ந்தது. பின்னர் மரகதம் அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தி வந்த சின்னா. சுப்புராயருக்கு வேதவள்ளி நாச்சியார் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தை என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அவரது வாழ்வில் மீண்டும் விதி விளையாடத் தொடங்கியது. அவரது மனைவி மரகதம் அம்மையார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

துயரச்சம்பவங்களின் தொடர்ச்சியால் பணம் ஈட்டுதலில் நாட்டத்தைக் குறைத்துக் கொண்ட சின்னா சுப்புராயப்பிள்ளை, தமக்குச் சொந்தமான இன்றைய திருவள்ளுவர் பணிமனை ஒட்டிய இடத்தில் பெரிய திடலை அமைத்து அங்கு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யத் தொடங்கினார்.

'பட்ட காலிலே படும்' என்னும் பழமொழிக்கு ஏற்ப அடுத்தடுத்த துயரச் சம்பவங்களினால் மனமுடைந்திருந்த சின்னா. சுப்புராயருக்கு மேலும் ஒரு பேரிடியாக அவரது ஒரே ஆதரவான மகள் வேதவல்லி நாச்சியாரும் 16 – ஆவது கன்னிப்பருவத்திலேயே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் மிகவும் மனக்கலக்கம் அடைந்த அவர் தனக்கு வாரிசு இல்லையே என்று எண்ணி கவலைப்பட்டார்.

மகளின் நினைவாகவே வாழ்ந்து வந்த சின்னா. சுப்புராயப்பிள்ளை, அவளுடைய உருவத்தை ஒத்த செப்புச்சிலையை பிரான்ஸ் நாட்டு தலைநகராகிய பாரீசில் செய்து புதுவைக்கு வரவழைத்து தற்போதைய திருவள்ளுவர் பணிமனை ஒட்டிய இடத்தில் கோயில் அமைத்து சிலையெழுப்பினார். அதோடு கோயிலின் பக்கத்தில் அன்னச்சத்திரம் அமைத்து வாழ்ந்து கெட்டவர்கள், வெளியே யாசகம் கேட்க அச்சப்படுபவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு இலவச மதிய உணவு அளித்து வந்தார்.

காலங்கள் உருண்டோடின. தள்ளாத வயதில் சின்னா. சுப்புராயப்பிள்ளையின் உடல்நிலை மோசமாகவே தமக்குப் பிறகு தாம் நடத்தி வரும் தர்மகாரியங்கள் எந்த காரணத்தினாலும் தடைபட்டுவிடக்கூடாது என்றெண்ணினார். அதன்படி தனக்கிருந்த சொத்துக்களை தனது சகோதரர்களுக்கு உரிய வகையில் பிரித்துக் கொடுத்து விட்டு பின் தனக்குச் சொந்தமான, சுப்புராயப்பிள்ளை சத்திரத்திற்கு அருகில் அமைந்திருந்த நஞ்சை நிலம், அவர் வாழ்ந்த இல்லம், பிற இடத்தில் அமைந்திருந்த சொத்துக்கள், பங்கு பத்திரம், பொருட்கள் ஆகியவற்றை 1875 – ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஆறாம் நாள் பிரெஞ்ச் அரசாங்கத்திடம் ஒப்படைத்து தான் நடத்தி வந்த தரும காரியங்களை தடையில்லாமல் தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என்றும் தனது மகள் வேதவல்லி நாச்சியாரின் சிலைக்கு நாள்தோறும் அபிNஷக ஆராதனை செய்ய வேண்டும் என்றும் உயில் எழுதினார். அப்போதைய மதிப்பின்படி அவர் அரசாங்கத்திடம் ஒப்படைத்த சொத்தின் மதிப்பு மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆண்டில் அதனுடைய மதிப்பு சுமார் 30 கோடிக்கு மேல் இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அறப்பணிக்காக கொடையாக அளித்த வள்ளல் சின்னா.சுப்புராயப்பிள்ளை 1875 – ஆம் ஆண்டு, ஜீன் மாதம் இருபதாம் தேதி காலமானார். ஓய்வின்றி அறப்பணி செய்து கொண்டிருந்த அந்த தியாகவிளக்கு காலம் என்னும் சூறாவளியால் அணைந்து போனது. சின்னா.சுப்புராயப்பிள்ளையின் உடல் அவரது ஒரே மகள் வேதவள்ளி நாச்சியார் நினைவிடத்தின் கோயில் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டு நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டது. அவர் எழுதிய உயிலின்படி அறப்பணி அவை அமைக்கப்பட்டு கடந்த 133 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இன்று வரை தினமும் வேதவல்லி நாச்சியார் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு நாள்தோறும் எண்ணற்ற ஏழைகளுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்

என்னும் மகாகவி பாரதியாரின் வாக்குக்கு ஏற்ப தன் வாழ் நாள் முழுவதும் தானத்திலே சிறந்தது அன்னதானம் ஒன்று மட்டுமே.

அன்னதானம் ஒன்றே கர்மவினைகளைப் போக்கக்கூடியது. என்ற சித்தர்களின் வாக்குப்படி தான் மறைந்த பிறகும் அறப்பணி தொடர தன்னுடைய எல்லா சொத்துக்களையும் கொடையாக வழங்கி விட்டுப் போன வள்ளல். சின்னா. சுப்புராயப்பிள்ளை புதுச்சேரி வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. ஒரு தனிமனிதரால் தொடங்கப்பெற்ற அறச்செயல், நூற்றாண்டுகளைக் கடந்தும், தொடர்ந்து ஒரு நாள் கூடத் தவறாது நடைபெற்று வருவது இந்தியாவிலேயே இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது,

சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமணம் நிலையம்.

அதே சாலையில் உள்ள முருகன் கோயில்.

முத்திரையர் பாளையம் மார்க்கெட்.

மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை.

அதே சாலையில் உள்ள பான்டெக்ஸ் துணியகம்.

திருவள்ளுவர் அரசு போக்குவரத்துக் கழகம்.

கென்னடி நகரில் உள்ள யாத்ரி நிவாஸ்.

மற்றும், இந்திரா நினைவு நகரில் உள்ள காலிமனையும், சுப்புராயப்பிள்ளை சத்திரமும், வெள்ளாழ வீதியில் உள்ள ஓட்டு வீடும் சின்னா. சுப்புராயப்பிள்ளையின் சொத்துக்களாகும். இவையாவும் அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் சின்னா. சுப்புராயப்பிள்ளை அறக்கட்டளையால் இன்று வரை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த அறக்கட்டளை மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட ஏழை, எளியவர்களுக்கும், அனாதை சிறுவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் மற்றும் தீராத நோயுடையவர்களுக்கும் உதவித்தொகை, இலவச மதிய உணவு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி, இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரண உதவி என்று ஆண்டுதோறும் சராசரியாக 18 லட்ச ரூபாய் செலவில் அறப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வள்ளல். சின்னா சுப்புராயப்பிள்ளைக்கு சிலை அமைக்கவும், இலவச மதிய உணவுப் பெறும் பயணாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், அறக்கட்டளை முகப்பில், மறைமலையடிகள் சாலை சந்திப்பில் அலங்கார வளைவு, கல்வெட்டு மற்றும் சரித்திர வரலாற்று குறிப்புகள் அமைக்கவும் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுவையில் வாழ்ந்த மகாகவி பாரதியார், பாரதிதாசன், மகான் அரவிந்தர், ஆனந்தரங்கர் பிள்ளை போன்ற பல்வேறு ஆன்றோர்களையும், சான்றோர்களையும், கவிஞர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு சிலை வைத்தும், பிறந்த நாள்களில் விழா எடுத்தும், பெருமை சேர்த்து வரும் அரசு
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அறப்பணிக்காக அர்ப்பணித்த வள்ளல் சின்னா. சுப்புராயப்பிள்ளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதுவை அரசு அவருக்கும் சிலை வைத்து விழா கொண்டாடுவதோடு அவரது வரலாற்றையும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய இந்த அறக்கட்டளையின் சொத்துக்களையும், நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்றில்லாமல் தான தர்மங்கள் செய்து புதுவை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள சின்னா. சுப்புராயப்பிள்ளையின் தான தர்ம காரியங்களை நினைத்து எண்ணம் பூரிப்போம் . . .

Thursday, June 19, 2008

புதுச்சேரி வானொலி நிலையத்தின் புதிய பண்பலை சேவை துவக்கம்

புதுச்சேரி வானொலி நிலையம் புதிதாக தனது பண்பலை சேவையைத் தொடங்கியுள்ளது. ரெயின்போ FM என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பண்பலை வரும் 21-ஆம் தேதியிலிருந்து தன்னுடைய சேவையைத் துவங்க உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி சமுதாயநலனைக் கருத்தில் கொண்டும் நிகழ்ச்சிகளை வழங்க புதுச்சேரி வானொலி நிலையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி வானொலிநிலைய இயக்குனர் கல்யாணிராமச்சந்திரன், "குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், எழுத்தறிவில்லாதவர்கள், கிராமப்புறத்தினர் உட்பட அனைத்துத் தரப்பினரின் ரசனையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நேயர்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்கலாம்" என்றார்.

கோரிமேடு அன்னைதெரசா சுகாதாரக் கல்வி நிலையத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர்.ரங்கசாமி கலந்து கொண்டு ரெயின்போ பண்பலையைத் துவங்கி வைக்கிறார். மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, எம்.பி. ராமதாஸ், பிரச்சார்பாரதியின் முதன்மை செயல்அலுவலர் லல்லி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து புதுச்சேரி விவசாயிகள் சங்கம் - ஆர்ப்பாட்டம்

மாநிலம் முழுவதும் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் உரக்கடைகளில் இருப்பு, விலைப்பட்டியல் சரியாக இருக்கிறதா என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும், அதிக விலைக்கு உரங்களை விற்கும் தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தை எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் துவக்கிவைத்துக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். திரளான சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதுவையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட் பேனர்கள் அகற்றம்


புதுச்சேரியின் அழகைக் கெடுக்கும் வகையில் நகரப்பகுதிகளில் முக்கியச் சாலைகளில் அனுமதியின்றி கட்-அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை விளைவித்து வந்தது. மேலும் உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ள பேனர்கள் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நகரப்பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை ஒருவாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்குத் தொடரப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கலெக்டர் தேவநீதிதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி சிலை, ராஜா திரையரங்கு, அண்ணாசாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன.
ஒவ்வொரு முறையும் அனுமதியில்லாமல் வைக்கப்படும் பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும்படி கலெக்டர் தேவநீதிதாஸ் அறிக்கை விடுவதும், அப்போது ஒருசில தினங்களுக்கு மட்டும் அதனைக் கடைபிடித்துப் பின்னர் மீண்டும் சிலர் கட்-அவுட்டுகள் வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. கட்-அவுட்டு மற்றும் பேனர்களை வைத்தபின்னர் அதனை அகற்றும்படி அறிக்கைவிட்டு எச்சரிக்கும் அரசு அதனை வைப்பதற்கு முன்பாகவே தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அனுமதியின்றி கட்-அவுட் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகட்ட மானியம் வழங்க வலியுறுத்தி குருவிநத்தம் பகுதி மக்கள் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் தாங்கள் வசிக்கும் குடிசைகளை கல்வீடுகளாகக் கட்டிக்கொள்ள காமராஜர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அரசு ஒரு லட்ச ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. அந்தவகையில், குருவிநத்தம் தொகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் 200-பேர் இத்திட்டத்தின் கீழ் தங்கள் குடிசைவீடுகளை மாற்றியமைப்பதற்காக வின்னப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேற்று மானியத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்த 60 பேருக்குத் மானியத்தொகை வழங்கப்படமால், பதிவு செய்து 20 நாட்களே ஆன 20 பேருக்கு நேற்று மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் புகார் தெரிவித்து பஞ்சாயத்துத் தலைவர் ராஜாராம், வார்டுஉறுப்பினர் மூர்த்தி, குருவிநத்தம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்து ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு மானியம் வழங்காதது குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அலுவலர்கள், உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் தங்களால் பதில் கூற முடியாது என்று தெரிவித்தனர். இதனால் கிராமமக்களுக்கும், அலுவலர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தங்களுக்கு மானியத்தொகை வழங்காதது குறித்து உரிய விளக்கம் அளிக்கும் வரையில் அலுவலகத்தை விட்டுச் செல்லமாட்டோம் என்று கூறி கிராமமக்கள் அங்கேயே அமர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுபட்டவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி மானியம் வழங்கப்படும் என்று அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையொன்று வைக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு இன்றே மானியத்தொகை வழங்க வேண்டும் என்று கூறி கிராமமக்கள் அறிவிப்புப் பலகையை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மானியத்தொகை வழங்கும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி தொடர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏலம் விடப்பட்ட கடத்தல் அரிசி கர்நாடகாவிற்குச் செல்கிறது


புதுவையில் இருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 1500 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல மாநிலங்கள் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு DSP ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில்நிலையத்தில் பிடிப்பட்ட அரிசியையும், திருபுவனை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடோன்களில் ஆய்வுசெய்த போது கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசியையும் உப்பளம் மத்திய உணவுக்கிடங்கில் வைத்து சீல் வைத்தனர். அரிசி மூட்டைகள் மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மக்கி வீணாகும் நிலைமை ஏற்பட்டது. இதனால் அவற்றை ஏலம்விட கலெக்டர் தேவநீதிதாஸ் உத்தரவிட்டார். மூன்று பகுதிகளாக அரிசி மூட்டைகளைப் பிரித்து ஏலம் விடப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மூன்றரை கோடி ரூபாய்க்கு டென்டர் கோரின. அந்த டென்டர் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தொகையை அந்நிறுவனங்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு செலுத்தின. இந்நிலையில் அரிசி மூட்டைகளை குடோனில் இருந்து எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் டென்டர் எடுத்த தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலில் லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு வருகின்றன. தாசில்தார் மகாதேவன், சிபிஐ அதிகாரிகள், உணவுக்கடத்தல் எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அரிசி மூட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சரக்குரயில் புதுவையிலிருந்து நாளை கர்நாடகாவிற்குப் புறப்பட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலச்சீட்டு நடத்தி 15 லட்ச ரூபாய் மோசடி செய்தவர் கைது

முருங்கப்பாக்கம் திரெளபதியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். பழக்கமானவர்கள் என்பதால் ஏராளமானோர் இவர்களிடம் 10ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் சீட்டு கட்டி வந்தனர். இந்நிலையில் ஏலம் எடுத்தவர்களுக்கு அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் ஏலச்சீட்டு நடத்துவதாகக் கூறி 15 லட்ச ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. இதனிடையே தலைமறைவானவர்களைக் கண்டுபிடித்து தங்களுடைய பணத்தை மீட்டுத் தரும்படி ஏலச்சீட்டு கட்டியவர்கள் முதலியார்பேட்டை காவல்நிலையத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தலைமறைவான ஜானகிராமன் விழுப்புரத்தில் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது. அதன்பேரில் விழுப்புரத்திற்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் ஜானகிராமனைக் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Wednesday, June 18, 2008

தட்டாஞ்சாவடி தொழிற்சாலையில் பெண் பலி

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் பெண் தலைநசுங்கி பலியான சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை அரசுப்பள்ளிகளில் அடுத்தமாதம் முதல் வீடியோ கான்பெரன்சிங் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் - கல்வியமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ கான்பெரன்சிங் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக ஐம்பது பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வீடியோ கான்பெரன்சிங் வசதிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காலாப்பட்டு செவாலியர் செல்லான் அரசு மேனிலைப் பள்ளியில் வீடியோ கான்பெரன்சிங் அமைப்பபதற்கான பணிகளை அமைச்சர் ஷாஜகான் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று தலைமை ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அனைத்துப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் வீடியோ கான்பெரன்சிங் மூலம் திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.
இதன்மூலம் மாணவர்களுக்கு பாடத்தில் உள்ள ஐயங்கள் களையப்படுவதோடு மட்டுமின்றி, ஆங்கில உரையாடல்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடையேயும் வீடியோ கான்பெரன்சிங் மூலம் தானாகவே நேரிடையாக அந்தந்த பள்ளிகளில் உள்ள வசதி குறைபாடுகள், கல்விமுறைகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் முருகேசன் மற்றும் திரளான ஆசிரியர்களும், மாணவ - மாணவியரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tuesday, June 17, 2008

சமர்ப்பணம்

"பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை வெறித்துப் பார்த்தது போல்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அந்த பட்டிக்காட்டானுக்கும், பஞ்சுமிட்டாய்க்கும் என்ன தொடர்பிருக்குமோ அந்த அளவே எனக்கும், கணினிக்குமான தொடர்பு இருந்தது. விளையாட்டை விரும்பிய விடலைப் பருவத்தில் கணினியில் கூட விளையாடலாம் என்று என்னுடைய நண்பர்கள் கூறியதைக் கேட்டு அருகிலிருந்த இணைய மையத்திற்கு ஒருமணிநேரத்திற்கு 30 ரூபாய் கொடுத்து வீணாக விளையாட்டாய்க் கணினியில் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு இதற்குள் உலகமே அடங்கியிருப்பது தெரியாமல் போனது. நாள்தோறும் கணினி விளையாட்டிலேயே இருந்த வந்த என் ஆர்வம் இணையத்தின் பக்கமும் திரும்ப ஆரம்பித்தது. பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியாக எனது வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு கணினிக்கும், எனக்குமான இடைவெளி அதிகமானது. அலுவலகத்தில் கணினி இருந்தபோதிலும் அலுவல் தொடர்பான பணிகளை மட்டுமே பயன்படுத்துவதால் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு நேரம் கிடைக்காமல் போனது. அப்போது தான் தினமணி நாளிதழில் "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் தமிழ்க்கணினி பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது" என்ற செய்தியைப் பார்த்தேன். இச்செய்தியைப் பார்த்ததும் எனக்குள் இருந்த கணினி ஆர்வம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. அதிலும் எனக்குப் பிடித்த தமிழ்மொழியில் சொந்தமாக வலைப்பதிவைத் தொடங்கலாம், நம்முடைய படைப்புகளை வெளியிடலாம் என்று அறிந்ததும் உடனடியாக பயிலரங்கில் கலந்து கொள்ள என்னுடையப் பெயரைப் பதிவு செய்துகொண்டேன்.

டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் சற்குரு ஓட்டலில் நடைபெற்ற தமிழ்க்கணினி பயிலரங்கில் பங்கேற்றேன். கணினித் துறை வல்லுனர்களும், தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும், பேராசிரியர்களும், கலந்து கொண்டு ஒருங்குறியைப் பயன்படுத்தி தமிழ் மொழியிலேயே இணையத்தில் தட்டச்சு செய்வது, சொந்தமாக வலைப்பதிவை உருவாக்கிக் கொள்வது, ஒலி, ஒளியை இணைப்பது, திரட்டியில் இணைப்பது என்று பல்வேறு பயனுள்ள தகவல்களை பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டேன். முதுகலைத் தமிழ் பயின்றும் தமிழை வளர்ப்பதில் இப்படி ஒரு முறை இருப்பதை அந்த பயிலரங்கில் தான் தெரிந்து கொண்டேன். பயிலரங்கில் அளிக்கப்பட்ட மென்பொருள் குறுந்தகட்டைப் பயன்படுத்தி எனது அலுவலக கணினியில் ஒருங்குறி எழுத்துருவை நிறுவினேன். பின்னர் எனக்கென ஒரு வலைப்பதிவை ஒருவாக்கி அதில் என்னுடைய கவிதைகளை எழுதி வருகிறேன்.
மேலும் அடுத்தகட்டமாக புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் இணையத்தில் தமிழ்வளர்ச்சியும், பயன்பாடும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு இணையம் தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிந்து கொண்டேன். அதன் பயனாக கவிதை வலைப்பூவை உருவாக்கி எழுதிவந்த நான், தற்பொழுது புதுவையில் நடைபெறும் அன்றாட செய்திகளைப் பதிவு செய்வதற்காக சற்றுமுன் புதுச்சேரி என்ற புதிய வலைப்பூவை உருவாக்கியுள்ளேன்.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்"
என்னும் மகாகவி பாரதியின் வாக்குக்கு ஏற்ப என்னைப் போல் எத்தணையோ தமிழ் ஆர்வலர்களுக்கு இணையத்தை கொணர்ந்துச் சேர்த்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம் . . .